
07.01.2021-
சிறப்புமிகு தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் தைப்பொங்கலை இவ்வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி, வியாழக்கிழமை கொண்டாடவிருக்கிறோம்.
இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையாக கொண்டாடப்படும் தைப்பொங்கலை வைக்க உகந்த நேரம் குறித்து மலேசிய இந்து சங்கம் விளக்கம் அளிக்கிறது.
தைப்பொங்கல் அன்று, கோலாலம்பூரில் மலேசிய நேரப்படி காலை 7.26 மணிக்கு சூரிய உதயமாகும். அதேநேரத்தில் காலை 7.26 முதல் 8.55 மணி வரை எமகண்ட நேரமாகும். எனவே, இந்த நேரத்தில் பொங்கல் வைக்க கூடாது.
அதன்பிறகு, காலை மணி 9 முதல் 10.20 மணி வரை தைப்பொங்கல் வைக்க நல்ல நேரமாகும். அது செவ்வாய் ஓரையும் சூரிய ஓரையுமாகும். இந்த நேரத்தில் பொங்கல் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் காலை 11.55 மணி முதல் பிற்பகல் 1.20 மணி வரை பொங்கல் வைக்கலாம்.
அதேநேரத்தில், தற்போது கோவிட்-19 நச்சில் பெருந்தொற்றால் மீட்சிப்பெறும், நிபந்தனைக்குட்பட்ட மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், பொங்கல் பண்டிகையை இல்லத்திலேயே சிறப்பாக கொண்டாடும்படி மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆலயங்களில் வைக்கப்படும் பொங்கலில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 30-க்கு மேற்போகாமல் இருப்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டுகளைப் போல் இயக்கங்களோ தனிப்பட்ட முறையிலோ ஏற்பாடு செய்யும் அதிகமானோர் கலந்து கொள்ளும் பொது பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது சான்றோர் வாக்கு. பிறக்கும் தை மாதம் மக்களுக்கு சிறந்தவற்றை வழங்கும் என்ற நம்பிக்கையோடு நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) பின்பற்றி தைப்பொங்கலைக் குடும்பத்தோடு கொண்டாடுவோம்.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW., JMW., AMK., BKM., PJK
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்